டெல்லி:

டிசம்பர் மாதம் இறுதியில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் திமுக உள்பட புதிதாக 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்துள்ள மனுவை, அவசர வழக்காக விசாரிக்கவும் உச்சநீதிமன்றம்  அனுமதித்துள்ளது.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். தேர்தலை அறிவித்த பிறகு வார்டு பிரித்துள்ளது சரியல்ல என்ற கூறி திமுக தொடர்ந்த வழக்கால், தேர்தல் தள்ளிப்போனது. இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, டிசம்பருக்குள் தேர்தல் நடத்தி முடிக்க தமிழகஅரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் சுறுசுறுப்படைந்து, அது தொடர்பான அரசாணைகளும் பிறக்கப்பட்டன. உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு அளித்த உறுதியின்படி, டிசம்பர் இறுதியில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில், தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வார்டுகள் வரையறை செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று திமுக. மீண்டும் உச்சநீதி மன்றத்தின் கதவை தட்டி உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள திமுக, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிடும் முன் தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தது.

திமுகவின் முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம்,  வழக்கை பட்டியலிடுமாறு உத்தரவிட்டுள்ளது. திமுக மனுவுடன் மேலும்  சிலர் தொடர்ந்துள்ள வழக்குகளும் சேர்ந்து விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற வாய்ப்பு இல்லை என்றே நம்பப்படுகிறது…

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஓங்கி குரல்கொடுத்து வந்த திமுக, லோக்சபா தேர்தல் முடிவுக்கு பிறகு மேலும் குரலை உயர்த்தி வந்தது. ஆனால், சமீபத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு, திமுக அடக்கி வாசிக்க, அதிமுக,  உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் முனைப்பு காட்டி வந்தது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க  புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட காரணம் காட்டி திமுக உச்சநீதி மன்றத்தை நாடி உள்ளது

இது,  உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.