இந்திய அணியின் கேப்டன்ஷிப் தனித்தனியாக பிரிகிறதா?

மும்பை: உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதியில் நியூசிலாந்துடன் தோற்று வெளியேறியதை அடுத்து, அணியில் நிலவும் சிக்கல்கள் மற்றும் அணியின் கேப்டன்ஷிப்பை பிரிப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு போட்டித் தொடர் முடிந்தவுடன், உடனே அடுத்தப் போட்டிக்கு தயாராக வேண்டுமெனவும், அப்போதுதான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்குமெனவும் கூறப்படுவதோடு, இந்திய அணியின் கேப்டன்சியை இருவருக்குப் பகிர்ந்தளிப்பது தொடர்பாகவும் கருத்துகள் வெளியாகின்றன.

அதாவது, ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கு ரோகித் ஷர்மாவை கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு விராத் கோலியை கேப்டனாகவும் நியமிப்பது தொடர்பான கருத்துக்களும் வெளிவருகின்றன.

அணி நிர்வாகம் தொடர்பான ஒரு அதிகாரி கூறியதாவது, “குறுகிய ஓவர் போட்டிகளுக்கு ரோகித் ஷர்மாவை கேப்டனாக நியமிப்பதற்கு இதுவே சரியான தருணம். தற்போதைய கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்திற்கு சிறப்பான ஆதரவு இருந்தது. ஆனால், இப்போதே அடுத்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு தயாராவது முக்கியம்.

தேவையான விஷயங்களில் கவனம் செலுத்தி, பலவீனமான அம்சங்களை சரிசெய்ய வேண்டும். இத்தகையப் பணிகளை மேற்கொள்ள ரோகித் ஷர்மா சரியான நபராக இருப்பார்” என்றார்.

எதிர்வரும் நாட்களில், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தேர்வுக் கமிட்டியின் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோர் கலந்துகொள்ளும் ஆய்வு கூட்டத்தில், கோலி மற்றும் ரோகித் ஆகிய இருவருக்கிடையே நிலவுவதாக கூறப்படும் பிரச்சினைகளும் அலசப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.