சென்னை: முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் டிஆர்பி தேர்வின்போது, தேர்வு மையங்களில் சர்வர் டவுன் ஆகாமல் இருக்க வேண்டுமே என்று தேர்வர்கள் உட்பட பலரும் கவலை அடைந்துள்ளனர்.

பள்ளிகளில் மேல்நிலைப் பாடப்பிரிவுகளுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான டிஆர்பி தேர்வு தமிழகமெங்கும் மொத்தம் 154 மையங்களில் இன்று துவங்குகிறது.

செப்டம்பர் 27 துவங்கி, முற்பகல் மற்றும் பிற்பகல் என்று செப்டம்பர் 29ம் தேதிவரை மொத்தம் 3 நாட்கள் இத்தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வு பேப்பர் – பேனா அடிப்படையில் இல்லாமல் முற்றிலும் ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது.

ஆனால், சிக்கல் என்னவெனில், தேர்வு நடக்கும் மையங்களில் சர்வர் டவுன் ஆகாமல் இருக்க வேண்டும். கடந்தமுறை நடந்த ஒரு ஆன்லைன் டிஆர்பி தேர்வில் சர்வர் டவுன் ஆகி பெரிய சிக்கல் ஏற்பட்டது. தற்போது தேர்வுகள் முற்றிலும் ஆன்லைன் முறையில் நடக்கிறது. எனவே, சர்வர் டவுன் ஆகிவிடுமோ? என்ற கவலை பலருக்கும் உள்ளது.

நமது நாட்டைப் பொறுத்தவரை, தகுதி மற்றும் திறமையை சோதிப்பதற்காக மனப்பாடத் தேர்வுகளை நடத்துகிறோம் என்று சொல்லிவிட்டு, அத்தேர்வுகளைக்கூட முறையாக மற்றும் தகுந்த ஏற்பாடுகளுடன் திறமையாக நடத்துவதற்கு முடியாமல்தான் நமது நிர்வாக அமைப்புகள் பல சமயங்களில் இருக்கின்றன என்பது சமூக விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இதற்கான மிகப்பெரிய சமீபத்திய உதாரணமாக அவர்கள் நீட் தேர்வை காட்டுகிறார்கள்.