புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 என்பதைத் தாண்டியுள்ள நிலையில், நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து, ஊரடங்கு செப்டம்பர் வரை நீட்டிக்கப்படலாம் என்று அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

அமெரிக்க ஆய்வு நிறுவனமான பாஸ்டன் ஆலோசனை குழு, ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தேதி, முழு ஊரடங்கா? அல்லது பகுதி ஊரடங்கா? நோய் உச்சமடையும் காலம் போன்ற தரவுகளை மதிப்பீடு செய்து, எந்த நாட்டில், எவ்வளவு நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் என்ற விபரங்கள் அடங்கிய அறிக்கையை அளித்துள்ளது. அதில்தான் இந்தியாவில் ஜூன் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்கு முன்பு ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

1 லட்சம் பேருக்கு எத்தனை உள்நோயாளி படுக்கை வசதிகள் உள்ளன? 1 லட்சம் பேரில் எத்தனை பேருக்கு சுவாச நோய்கள் உள்ளன? தொற்று நோயை சமாளிக்கும் திறன் ஆகிய காரணிகளும் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்த வகையில், இந்தியாவில் உள்நோயாளி படுக்கைகள் குறைவாகவும், சுவாச நோய் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், தொற்று நோயை சமாளிக்கும் திறன் மோசமாகவும் உள்ளதாக பாஸ்டன் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. அந்தவகையில், இந்தியாவை அந்த ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.