ஆந்திராவின் ஆன்மீக தலைநகராகுமா திருப்பதி? – புதிய கோரிக்கை

திருப்பதி: ஆந்திரப் பிரதேசத்தின் ஆன்மீக தலைநகராக திருப்பதி நகரை அறிவிக்க வேண்டுமென புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1953ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக மொழிவாரி மாநிலம் கேட்டு ஆந்திரர்கள் போராட்டத்தைத் தொடங்கியது முதலே, தலைநகரப் பிரச்சினை அவர்களுக்குத் தொடங்கியது. அந்தப் பிரச்சினை இன்றுவரை தீர்ந்தபாடில்லை.

தெலுங்கானா பிரிந்த பிறகு விஸ்வரூபம் எடுத்தப் பிரச்சினை, தற்போது ஜெகன்மோகன் ஆட்சி அமைந்த பின்னரும், வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுள்ளது.

அவர், ஆந்திராவின் சட்டசபை தலைநகராக அமராவதியையும், நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டணத்தையும், நீதிமன்றத் தலைநகராக கர்ணூலையும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

தற்போது, தலைநகரம் தொடர்பாக, ராயலசீமா போராட்ட சமிதி என்ற அமைப்பிடமிருந்து புதிய கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது. அதன் தலைவர் நவீன்குமார் ரெட்டி என்பவர், திருப்பதியை ஆன்மீக தலைநகராக அறிவிக்க வேண்டுமென மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால், மாநிலத்திற்கான தலைநகரங்களின் எண்ணிக்கை நான்காக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.