சென்னை:

மிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பான வழக்கில், கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என உயர்நீதி மன்ற மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.

‘மக்கள் பணியில் மக்கள்’ என்ற அமைப்பின் பொருளாளர் தேசிகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால், ராமநாதபுரம் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கஜா புயலால் ஒரு லட்சம் மின் கம்பங்கள், ஆயிரம் மின்மாற்றிகள், 201 துணை மின் நிலையங்கள் முழுமையாக சேதமாகின. கஜா புயல் பாதித்த பல கிராமங்களில் இன்னும் மின் விநியோகம் சீரடையவில்லை.

இதனால் அந்த கிராமங்களில் குடிக்கவும், குளிக்கவும் பிற பணிகளை நிறைவேற்றவும் முடியா மல் மக்கள் தவிக்கின்றனர். இயற்கை பேரரிடர் காலங்களில் மின்சாரம் தடையின்றி கிடைத்தால் தான் பேரழிவில் இருந்து விரைவில் மீள முடியும். எதிர்காலத்தில் மின் விநியோக பாதிப்பு, மின் துண்டிப்பு போன்ற பிரச்சினைகளை தவிர்க்க பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டுச் செல்லும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டுச் செல்வது பொது மக்கள், விலங்குகள், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது.

இது தொடர்பாக மின்வாரியத்துக்கு 2018- டிசம்பர் 4ல் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்க வில்லை. ஆகவே, கடலோர பகுதி உட்பட தமிழகம் முழுவதும் பூமிக்கடியில் மின்கம்பிகளை கொண்டுச் சென்று மின் விநியோகம் செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது,  தமிழகத்தில், குறிப்பாக இயற்கை பேரிடர் நிகழும் பகுதிகளில் பூமிக்கடியில் மின் கம்பிகளை கொண்டுச்செல்லும் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியத்திடம் போதுமான நிதி உள்ளதா?

கோடை காலத்தில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

காற்றாலை மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

காற்றாலை மின்சாரம் தனியாருக்கு விற்கப்படுகிறதா?

தமிழகத்தின் மின் தேவைக்காக பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறதா?

அப்படி வாங்கப்பட்டால் மின்சாரத்துக்கான கட்டணம் எவ்வளவு?

சூரிய ஒளி மின் உற்பத்தி எவ்வளவு?

அந்த மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா?

தனியாருக்கு எவ்வளவு வழங்கப்படுகிறது?

என சரமாரியாக என்று கேள்வி எழுப்பினர்.  மேலும் இது தொடர்பாக மின்வாரிய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 18ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.