சென்னை: இன்னும் விற்பனையாகாமல் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளை கொரோனா தனிமை முகாம்களாக மற்றும் வார்டுகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை துவக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 92 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்களில், தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்களை, தனிமை முகாம்களில் வைக்க வேண்டியது அவசியம். அடுத்து வரும் வாரங்களில், தனிமை முகாம்கள், சிறப்பு வார்டுகள் ஆகியவற்றின் தேவை அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கான போதிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பணிகளை, அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக, கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை சுகாதாரத் துறை ஆய்வுசெய்து வருகிறது.

இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்டு, விற்பனையாகாமல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை, தனிமை முகாம்கள் மற்றும் சிறப்பு வார்டுகளாக மாற்றுவது குறித்து அரசு ஆய்வுசெய்து வருகிறது. இதற்காக, ‘கிரெடாய்’ அமைப்புடன் சுகாதாரத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதில், 100% வீடுகளும் விற்காமல் அல்லது ஒப்படைக்கப்படாமல் இருக்கும் வளாகங்களை மட்டுமே கொரோனா முகாம்களாகப் பயன்படுத்த முடியும். எனவே, அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்று கூறப்பட்டுள்ளது.