டில்லி:

‘‘பாசன பணிகளுக்கு கால்வாய்களுக்கு பதிலாக இரும்பு குழாய்கள் பயன்படுத்தப்படும்’’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

மொராக்கா நாட்டின் போக்குவரத்து, உபகரணங்கள் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் அப்தெல்காதர் அமரா தலைமையிலான பிரதிநிதிகள் குழு இந்தியா வந்துள்ளனர். அவர்களது முன்னிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்காரி கலந்துகொண்டு பேசுகையில், ‘‘இ ந்தியாவின் ஒரு பகுதியில் அதிகளவில் நீர் உள்ளது.

மற்றொரு புறம் நீருக்கு பற்றாகுறை உள்ளது. அதனால் இங்கு நீர் பாதுகாப்பு என்பது முக்கிய பங்காற்றுகிறது. அதற்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்நுடங்களையும் ஊக்குவித்து வருகிறோம். இதன் ஒரு கட்டமாக பாசனத்துக்கு கால்வாய்களுக்கு பதிலான இரும்பு குழாய்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலம் கையகப்படுத்தும் செலவு மிச்சப்படுத்தப்படும்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘இங்கு நிலம் கையகப்படுத்துதல் என்பது அதிக செலவு ஆகிறது. இரும்பு குழாய் பயன்பத்தும் முடிவால் செலவு மட்டுமின்றி நீர் கொண்டு செல்வதும் இரட்டிப்பாக அதிகரிக்கும். நீர் வளத் துறை சார்பில் அதிக தொழில்நுட்பங்களுக்கு அங்கிகாரம் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்தை ஊக்குவித்து வருகிறோம். அடுத்து நதிகள் இணைப்புக்கு திட்டமிடப்படுகிறது. இதன் மூலம் நீர் தேவை உள்ள பகுதிக்கு நீர் கொண்டு செல்லப்படும். அண்டை நாடுகளுடன் நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்து, விவசாயம் ஆகிய துறைகளில் கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள பிரதமர் மோடி ஏற்கனவே நெடுங்சாலைகளுக்காக பாரத்மாலா திட்டத்துக்கு ரூ. 7 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். துறைமுகம் சார்ந்த பொருளாதார மண்டல மேம்பாட்டுக்கான சாகர்மாலா திட்டத்துக்கு ரூ. 14 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவுடனான கூட்டாணமையை வலுப்படுத்த இந்தியா தயாராக உள்ளது’’ என்றார்.

இதை தொடர்ந்து இரு நாடுகளுடனான நீர் வளம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. சாலை போக்குவரத்து, கடல் சார்ந்த பணிகள் குறித்து இரு நாட்டு வல்லுனர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.