யோகியின் ஆட்சியால் உத்திரப்பிரதேசத்தில் இடங்களை இழக்குமா பா.ஜ.க?

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் மீதான அதிருப்தியால், உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேவையான மக்களவை இடங்களைப் பெறுவது, பாரதீய ஜனதா கட்சிக்கு பெரிய சவாலான விஷயமாக மாறியுள்ளது.

கடந்தமுறை அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை இடங்களில், 73 இடங்களை அள்ளியது பாரதீய ஜனதா. ஆனால், இந்தமுறை, அந்த எண்ணிக்கையிலிருந்து 25 முதல் 50 இடங்கள் வரை குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கு காரணம், அகிலேஷும் மாயாவதியும் அமைத்துள்ள பிரமாண்ட கூட்டணி மட்டுல்ல என்பதும், மாநில அரசின் மீது நிலவும் மிக மோசமான அதிருப்தியும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விவசாயக் கடன்கள், வேளாண்மைக்கான மின்சார பகிர்மானம், ஊரக மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புகள், போக்குவரத்து நெருக்கடிகள், காற்று மற்றும் நீர் தூய்மை உள்ளிட்ட வாழ்க்கை சார்ந்த அனைத்து முக்கியமான விஷயங்களிலும், யோகியின் அரசு, சராசரிக்கும் குறைவான நேர்மறை வாக்குகளையே சர்வேயில் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் என்ற வேறுபாடின்றி, அனைத்துப் பகுதிகளிலும் மாநில பாரதீய ஜனதா அரசின் மீது அதிருப்தி நிலவுகிறது. எனவே, இத்தேர்தலில், உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாரதீய ஜனதா கரை சேறுமா? என்ற பலமான கேள்வி எழுந்துள்ளது.

– மதுரை மாயாண்டி