வெலிங்டன்: இந்திய கேப்டன் விராத் கோலியுடன் எதிரெதிராக விளையாடிக் கொள்வதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றுள்ளார் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.

விராத் கோலியுடனான தனது நட்பு குறித்து உணர்வுப்பூர்வமாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் கேன் வில்லியம்சன்.

கடந்த 2008ம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் நியூசிலாந்து சார்பில் கேன் வில்லியம்சனும் இந்தியா சார்பாக விராத் கோலியும் கலந்து கொண்டனர். அப்போதிருந்தே இருவரும் நண்பர்கள் ஆனார்கள்.

தற்போது கேன் வில்லியம்சன் கூறியுள்ளதாவது, “இருவரும் எதிரெதிராக விளையாடிக் கொள்ள வாய்ப்புக் கிடைத்தது எங்களின் அதிர்ஷ்டம். இளம் வயது தொடங்கி, கோலியின் வளர்ச்சி & முன்னேற்றத்தை இப்போது வரை காண்பது மகிழ்ச்சிகரமான ஒன்று.

நாங்கள் பல நாட்களாக எதிரெதிரே விளையாடி வந்தாலும், கடந்த சில நாட்களாகத்தான் விளையாட்டுப் பற்றி எங்களின் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆடுகளத்தில் நாங்கள் விளையாட்டின்போது வெளிப்படுத்தும் மாறுபட்ட அம்சங்கள், எங்களின் தனித்துவமான அம்சங்களாகும்” என்றார் கேன் வில்லிம்சன்.