லண்டன் :

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அபாயம் இருப்பதால் இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. விம்பிள்டன் தொடரை நடத்தி வரும் ஆல் இங்கிலாந்து கிளப் இது குறித்து அவசர கூட்டம் கூட்டி இந்த முடிவை எடுத்துள்ளது.இரண்டாம் உலகப் போருக்கு பின் இப்போது தான் விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது டென்னிஸ் உலகில் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.முன்னதாக மற்றொரு கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது

குறிப்பிடத்தக்கது.விம்பிள்டன் தொடர் இந்த ஆண்டு ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை நடைபெற இருந்தது. இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ள தொடர், 2021ஆம் ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 11 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.1915 முதல் 1918 வரை முதல் உலகப் போர் காரணமாகவும், 1940 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் காரணமாகவும் விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்ட பல விளையாட்டுத் தொடர்களின் வரிசையில் விம்பிள்டனும் சேர்ந்துள்ளது.உலகம் கொரோனா வைரஸ் காரணமாக மோசமான நிலையை சந்தித்துள்ள நிலையில், இந்த தொடரை ரத்து செய்வதே சரியான முடிவு என விம்பிள்டன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிக்கெட் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது அதற்கு பதிலாக அடுத்த ஆண்டு தொடருக்கு இப்போதே இரண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.