சவுத்தாம்ப்டன்: எச்சில் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையிலும், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் புயல் ஜேஸன் ஹோல்டர்.
கொரோனா பரவல் காரணமாக, கிரிக்கெட்டில் பந்தைப் பளபளப்பாக்குவதற்காக, எச்சில் பயன்படுத்தும் வழக்கமான நடைமுறைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதனால், பந்தை எப்படி ஸ்விங் செய்ய முடியும்? என்ற கேள்வி எழுந்தது. மேலும், இந்தத் தடை உத்தரவு, பவுலர்களுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி, கிரிக்கெட்டின் சமநிலையை பாதித்துவிடும் என்றும் கவலை தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது நடைபெற்றுவரும் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், எச்சிலைப் பயன்படுத்தாமலேயே, பந்தை நல்ல முறையில் ஸ்விங் செய்து, மொத்தமாக 6 விக்கெட்டுகளை அள்ளியுள்ளார் விண்டீஸ் ஜேசன் ஹோல்டர்.
அந்த அணியின் மற்றொரு வேகப்பந்து வீரர் கேப்ரியல், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். எச்சிலைப் பயன்படுத்தாமல், பந்தை ஸ்விங் செய்யும் வகையில், இவர்கள் சிறப்பான முறையில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

மொத்தம் 20 ஓவர்கள் வீசிய ஹோல்டர், 6 மெயிடன்கள் வீசியதுடன், வெறும் 42 ரன்கள் மட்டுமே கொடுத்து, 6 பேரை வெளியேற்றினார். கேப்ரியல், 15.3 ஓவர்கள் வீசி, 62 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
ஆனால், இந்த ஒரு இன்னிங்ஸை மட்டுமே வைத்து, எதையும் முடிவுசெய்யக்கூடாது என்றுள்ளனர் சில கிரிக்கெட் விமர்சகர்கள்.