வெல்லிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தோல்வியின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டுள்ளது விண்டீஸ் அணி.

தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 519 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி. இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி.

ஆனால், மூன்றாம் நாளில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. வெறும் 138 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஜான் கேம்ப்பெல் எடுத்த 26 ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ரன்கள்.

நியூசிலாந்து தரப்பில் வெறும் 4 பவுலர்கள் மட்டுமே பந்துவீசி அசத்தினர். டிம் செளதிக்கு 4 விக்கெட்டுகளும், கைல் ஜெமிசன் & நீல் வேக்னருக்கு தலா 2 விக்கெட்டுகளும், பெளல்ட்டுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.

இதனால், பாலோ ஆன் பெற்ற விண்டீஸ் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் எப்படியாவது தாக்குப்பிடித்து நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் சொதப்பியது அந்த அணி.

மூன்றாவது நாள் ஆட்ட முடிவில், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ஜெமைன் பிளாக்வுட் 80 ரன்களுடனும், அல்சரி ஜோசப் 59 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். இவர்கள் கிட்டத்தட்ட ஒருநாள் ஆட்டம் போன்று ஆடிவருகின்றனர்.

நீல் வேக்னர் 2 விக்கெட்டுகளையும், டிம் செளதி, பெளல்ட், கைல் ஜெமிசன் மற்றும் மிட்செல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

இன்னும் கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில், நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தொடுவதற்கே 185 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது விண்டீஸ் அணி. நேற்று ஒருநாளில் மட்டுமே தனது 16 விக்கெட்டுகளை நியூசிலாந்து பவுலர்களிடம் இழந்துள்ளது விண்டீஸ் அணி.