டில்லி:

விமானப்படைத் தளபதி தனோவாவை அழைத்துக்கொண்டு  மிக்-21 போர் விமானத்தில் மீண்டும் பறந்தார் அபிநந்தன். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பாலகோட் தாக்குதலின்போது, பாகிஸ்தானின்  எஃப்-16 ரக விமானங்கள் இந்திய ராணுவ முகாம்கள் மீது குண்டுவீச வந்ததை,  இந்திய தரப்பு மிக்-21 விமானங்கள் தடுத்து  பதில் தாக்குதல் நடத்தியது. அப்போது, விங் கமாண்டர் அபிநந்தன் பயன்படுத்திய போர் விமானம்  எஃப்-16 ரக விமானத்தை தாக்கி அழித்ததுடன், தனது விமானமும் தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் அவர் பாசூட்டில் பாகிஸ்தான் எல்லைக்குள் குதித்தார்.

அவரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. ஆனால், உலக நாடுகள் மற்றும் இந்தியா அழுத்தம் காரணமாக சுமார் 60 மணி நேரத்திற்கு பிறகு அபிநந்தன் இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சுமார் 6 மாத காலம் ஓய்வில் இருந்தார்.

இதன்பின்னர் கடந்த மாதம் மீண்டும் பணியில் சேர்ந்தஅபிநந்தன் நேற்று மீண்டும் மிக்-21 ரக விமானத்தை இயக்கினார். பஞ்சாபில்  உள்ள பத்தான்கோட் விமான தளத்தில் இருந்து மிக்-21 ரக போர் விமானத்தில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவாவுடன் சுமார் 30 நிமிடங்கள் பறந்தார்.

இதுகுறித்து கூறிய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா 1988-ஆம் ஆண்டு நான் பணியில் இருந்து விடுபட்ட போது 9 மாதங்களுக்கு பிறகு தான் மீண்டும் பறக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர் 6 மாதங்களிலேயே திரும்ப பறக்க தொடங்கிவிட்டார். அவருடன் பறந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது” என்று கூறினார்.

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு இந்திய அரசு சுதந்திர தினத்தில் வீர் சக்ரா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பயணத்தின்போது, அபினந்ததின் கம்பீரமான கடா  மீசை மிஸ்ஸாகி இருந்தது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.