ஹிலால் அகமது ரதர்..! முதல் ரபேல் போர் விமானத்தை இயக்கும் விங் கமாண்டர்..!

--

சண்டிகர்: பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ரபேல் விமானம் நாளை இந்தியா வருவதால் அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஒப்படைத்துள்ள ரபேல் போர் விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டு இருக்கின்றன. மொத்தம், 7,000 கிமீ துாரத்தை கடந்து, நாளை இந்தியா வந்து சேருகின்றன.

வரும் வழியில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள பிரான்ஸ் விமானப்படை தளத்தில் மட்டும் நிறுத்தப்பட்டன. ஹரியானா மாநிலம், அம்பாலா விமானப்படை தளத்தில், ரபேல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

அங்கு, இந்த விமானங்கள், நம் படையுடன் இணைகின்றன. இந்நிலையில், ரபேல் விமானம் நாளை தரையிறங்குவதால், அம்பாலா விமான நிலையத்தை சுற்றி உள்ள 4 கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் தரையிறங்கும் போது புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 கிமீ சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந் நிலையில் இந்திய மண்ணில் இறங்கும் முதல் ரபேல் போர்விமானத்தை இயக்கும் பெருமைக்குரிய விங்கமாண்டர் ஹிலால் அகமது ரதர் காஷ்மீர்காரர் ஆவார். இந்த தகவலை காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: இந்திய மண்ணில் இறங்கும் முதல் ரபேல் போர்விமானத்தை இயக்கும் பெருமைக்குரிய விங்கமாண்டர் ஹிலால் அகமது ரதர் காஷ்மீர்காரர்.

விமானப்படை அதிகாரியான அவர் கடந்த சில ஆண்டுகளாக பிரான்ஸில் தங்கி ரபேல் விமானத்தில் பொருத்தவேண்டிய ஆயுதங்களை இறுதி செய்து வடிவமைத்தவர்.வாழ்க அவரது பணி! என்று குறிப்பிட்டுள்ளார்.