ஐதராபாத்: சீன ஓபன் பேட்மின்டன் போட்டியில், அந்நாட்டு வீராங்கனை லி ஜுருயை வீழ்த்தியது தன் விளையாட்டு வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்கிறார் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் சிந்து.
அவர் கூறியுள்ளதாவது, “தொடக்கத்தில் எனது பேட்மின்டன் பயணம் பெரிய தடுமாற்றத்தில் இருந்தது. பல போட்டிகளில், தகுதிச் சுற்றுகளோடு வெளியேறிவிடுவேன். எனது தவறு என்ன என்பதை கண்டறிந்து அதை திருத்திக்கொண்டு, கடும் பயிற்சியில் ஈடுபட்டேன்.
கடந்த 2012ம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய லி ஜுருயை வென்றது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை. அதன்பிறகு படிப்படியாக முன்னேற்றம் கண்டேன்.
தற்போது, போட்டிகள் எதுவும் இல்லாத காரணத்தால், வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கிறேன்” என்றுள்ளார்.
சிந்து, தற்போது உலக பேட்மின்டன் சாம்பியனாக உள்ளார். ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளார்.