டிசம்பர் 11ந்தேதி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடக்கம்

டில்லி:

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் மாதம் 11ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்து உள்ளார்.

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.  ஆனால், சட்டமன்ற பதவி காலம் முடிய உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மற்றும்  தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாநிலங்களில் நடைபெறும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டு டிசம்பர் 11ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 11ந்தேதி தொடங்கும் இந்த கூட்டத்தொடர் ஜனவரி 8ந்தேதி வரை தொடர்கிறது.

இதுகுறித்து, இன்று மத்திய அரசு செய்தி தொடர்பகம் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளது. அதில்,  “அடுத்த குளிர்கால கூட்டத்தொடர் ஆனது வரும் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் நாள்  தொடங்கி, 2019-ம் ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் வரை நடைபெறும் என்று பாராளுமன்ற விவகார அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.” என குறிப்பிட்டுள்ளது.