அதிமுக எம்பிக்கள் அமளி: மாநிலங்களவை 31ந்தேதி வரை ஒத்திவைப்பு

டில்லி:

மேகதாது, ரஃபேல் விவகாரங்கள் தொடர்பாக அதிமுக மற்றும் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், மாநிலங்களவை வரும் 31ந்தேதி வரை ஒத்தி வைக்கப் படுவதாக மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்ந்த கடந்த 11ந்தேதி தொடங்கியது. முதல்நாள் மறைந்த எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் 12ந்தேதி முதல் அலுவல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கூட்டத்தொடரில் மேகதாது அணை, ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என அதிமுக, காங்கிரஸ் உள்பட  எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளன.

ஆனால், மத்திய அரசு இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க முன்வராததால்,  எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை பணிகள் முடக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில்,  பாராளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் நேற்று நிறைவேற்றப் பட்டது.

இந்த நிலையில் இன்று அவை கூடியதும்,  அ.தி.மு.க., காங்கிரஸ், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் எழுந்து தங்கள் மாநில பிரச்சனைகளை எழுப்பினார்கள்.

அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்தும், தெலுங்குதேசம் எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டும் கோ‌ஷம் எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.பி.க்கள் ரபேல் போர் விமான பிரச்சனை பற்றி பேசினார்கள். இதனால் அமளி ஏற்பட்டதைத்தொடர்ந்து பாராளுமன்ற மக்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் எம்.பி.க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்து 2 நாட்கள் விடுமுறை என்பதால் 31-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்டதால் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.