நிலத்தை சுற்றி கம்பி வேலி… இரு குடும்பத்தினரிடையே சமரசம் பேசிய திமுக எம்.பி…

தருமபுரி:  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இரு குடும்பத்தினர் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக, நிலத்தைச் சுற்றி கம்பி வேலி, அமைத்து  அடுத்தவர் நிலத்துக்கு செல்ல முடியாமல் இடைஞ்சல் ஏற்படுத்திய விவகாரத்தில், இரு குடும்பத்தினரிடையே திமுக எம்.பி. செந்தில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது அந்த பகுதி மக்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 தருமபுரி மாவட்டம் ஏரியூர் பென்னாகரம் அடுத்த சிடுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மற்றும் அர்ஜுனன் குடும்பத்தினருக்கு விவசாய நிலத்திற்கு செல்லும் பாதையில் தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில்,  தங்கவேல் குடும்பத்தினர் தங்களது விவசாய நிலத்தை சுற்றிலும் கம்பிவேலி அமைத்தனர். இதனால் அர்ஜுனன் குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு செல்ல வழியில்லாமல் தவித்தனர். இதனால் இரு குடும்பத்துக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக வருவாய்துறையிடமும் புகார் கூறப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இதில் உடனடி சமரசம் ஏற்படாத நிலையில், இந்த தகவல் தருமபுரி தொகுதி திமுக எம்.பியான செந்தில்குமாருக்கு எட்டியது.

உடனடியாக வருவாய் துறை அலுவலர்களுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த எம்.பி. செந்தில்குமார்,  இரு தரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டார். பின்னர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் அர்ஜுனன் குடும்பத்திற்கு நடைபாதை விடுவதற்காக வருவாய்த் துறையினர் சில யோசனைகளை தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட  தங்கவேல் குடும்பத்தினர்,  தங்களது குடும்பத்தில் ஆலோசனை செய்து தெரிவிப்பதாக செந்தில்குமாரிடம் உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து, தற்காலிகமாக இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து எம்.பி. நேரில் வந்து சமரசம் பேசிய அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.