சென்னை: பெயர்பெற்ற வணிக நிறுவனமான முருகப்பா குழுமத்தின் முதல் பெண் இயக்குநராக பதவியேற்க விரும்பிய அக்குடும்பத்தைச் சேர்ந்த வள்ளி அருணாச்சலத்தின் முயற்சி வாக்கெடுப்பின் மூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

திவான் பகதூர் முருகப்பா செட்டியாரால் உருவாக்கப்பட்டது முருகப்பா வணிகக் குழுமம். இதன் தற்போதைய மதிப்பு ரூ.38000 கோடி. இக்குழுமம் அம்பாடி இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

அந்த முருகப்பா செட்டியாரின் பேரன்தான் மறைந்த எம்வி முருகப்பன். அவரின் மூத்த மகள்தான் இந்த வள்ளி அருணாச்சலம். முருகப்பா குழுமத்தில் ஒரு பங்குதாரராக இருக்கும் வள்ளி அருணாச்சலம், அக்குழுமத்தின் இயக்குநராக விரும்பி, நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், அக்குழுமத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 21ம் தேதியன்று நடைபெற்றது. இதில், வள்ளி அருணாச்சலம் இயக்குநராக ஆவதை எதிர்த்து 91% வாரிய உறுப்பினர்கள் வாக்களித்து, அவரின் விருப்பத்தை நிராகரித்தனர்.

அக்குழுமத்தில், ஆண்கள் மட்டுமே வாரிய இயக்குநராக வர வேண்டுமென்ற ஒரு எழுதப்படாத விதி உள்ளது. அந்த வகையில், வள்ளி அருணாச்சலம், ஒரு பங்குதாரர் என்ற முறையில், வாரிய உறுப்பினராக இருந்து வாக்களிக்க மட்டுமே முடியும்.