அஜித்தின் “விஸ்வாசம்:” மே முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடக்கம்

சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இயக்குனர் சிவாவுடன் இணைந்து, வீரம், வேதாளம், விவேகம் என வெற்றி படங்களில் நடித்து வந்த அஜீத் மீண்டும் சிவாவுடன் விஸ்வாசம் என்ற படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே கடந்த மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திரையுலக வேலை நிறுத்தம் காரணமாக, பட வேலைகள் தாமதமானது.

இந்நிலையில், விஸ்வாசம் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில்  தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவாக படப்பிடிப்பு நடத்தி வரும் பொங்கலுக்கு (2019 ஜனவரி) படத்தை வெளியிட  படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.