5முக்கிய கேள்விகள்: டெல்லி வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வன்முறை! சோனியா காந்தி

டெல்லி:

டெல்லி வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வன்முறை என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வன்முறையின்போது, உள்துறை அமைச்சர், டெல்லி முதல்வர் எங்கே இருந்தனர் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய மாநில அரசுகளுக்கு முக்கிய 5 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் கோரி உள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், அந்த சட்டத்தை ஆதரித்தும் வடகிழக்கு டெல்லியின் பல இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தலைமைக் காவலர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். தற்போது பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.

மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியின் நான்கு பதற்றமான பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாபர் பாத் பகுதியில் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு அப்பகுதி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு டெல்லியை அண்டை மாநிலங்களுடன் இணைக்கும் மூன்று எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு அப்பகுதிகளில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “டெல்லியின் தற்போதைய நிலைமைக்கு மையமும் மத்திய உள்துறை அமைச்சரும் பொறுப்பு. மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியவர், டெல்லி அரசும், மையமும் வேண்டுமென்றே எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.

டெல்லி தேர்தலின் போதில் இருந்தே,  இதே போன்று நடந்ததை நாடே பார்த்தது. வன்முறையை தூண்டும் விதமாகவும், அச்சம் மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல பா.ஜ.க தலைவர்கள் பேசி வருகின்றனர். டெல்லியின் தற்போதைய நிலைக்கு மத்திய அரசும், மத்திய உள்துறை அமைச்சருமே பொறுப்பு.

கடந்த  72 மணி நேரமாக  நடைபெற்று வரும்  வன்முறையால்  நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டும், பலர் காயமடைந்த போதும், பலர் உயிரிழந்த நிலையிலும்டெல்லி போலீஸ் கையை கட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டியவர், 5 முக்கிய கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தார்.

அதன்படி,

1)  “கலவரம் வெடித்த ஞாயிறு முதல் உள்துறை அமைச்சர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார்?

2) கலவரம் உச்சத்தில் இருந்தபோது டெல்லி முதலமைச்சர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார்?

3) டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உளவுத்துறை கொடுத்த துப்புகள் என்னென்ன? அவற்றின் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

4) பிரச்னைக்குரிய பகுதிகளில் குவிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

5) நிலைமை கைமீறிச்சென்ற நிலையில், ஏன் துணை ராணுவப்படை களமிறக்கப்படவில்லை?”

இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.