டில்லி:

டோக்லாம் எல்லையில் 500 ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் சாலை விரிவாக்க பணியை சீனா மீண்டும் தொடங்கியிருப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லை பகுதியை பெய்ஜிங் மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளும் உரிமை கோரி வருகின்றன. இதில் பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் இதே டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க முயற்சித்த போது இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எல்லையில் இருநாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சீனா படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதால் போர் பதற்றம் நிலவியது. 70 நாட்கள் வரை இந்த பிரச்னை நீடித்தது.

தூதரக அளவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு ராணுவமும் பரஸ்பரம் பின்வாங்க சம்மதம் தெரிவித்தன. இதனால் அங்கு அமைதி நிலவியது. இந்த உடன்பாடு ஏற்பட்டு ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் டோக்லாம் எல்லையில் இருந்து சரியாக 10 கி.மீ. தொலைவில் சீனா சாலை விரிவாக்க பணியை தொடங்கியுள்ளது. 500 வீரர்கள் பாதுகாப்புடன் இந்த பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. சீனாவின் இந்த அத்துமீறலால் டோக்லாம் மீண்டும் பதற்ற சூழல் உருவாகியுள்ளது.