குஜராத் வங்கிகளின் திவால் சொத்து மதிப்பு ரூ.35,220 கோடி

காந்திநகர்:

குஜராத் வங்கிகளின் திவால் சொத்து மதிப்பு ரூ.35,220 கோடியாக கடந்த ஆண்டை விட 2017-18ம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரித்துள்ளது. குஜராத்தில் உள்ள அனைத்து பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளின் வராக்கடன் நிலவரம் இது என்று வங்கியாளர்கள் குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபனி கலந்துகொண்டார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் தான் அதிகளவில் வராக்கடன் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநில அளிவில் வங்கிகளின் திவால் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாத இறுதியில் திவால் சொத்துக்களின் மதிப்பு ரூ.35,342 கோடியாக இருந்தது. இது மார்ச் மாதத்தில் ரூ.35,220 கோடியாக குறைந்தது. இது அனைத்து வங்கிகளும் வழங்கிய கடனில் 6.53 சதவீதமாகும்.

2014ம் ஆண்டு மார்ச் வரை திவால் சொத்து மதிப்பு ரூ.15,171 கோடியாக இருந்தது. வராக்கடன் இருந்தபோதும் 2017-18ம் ஆண்டில் ரூ.50,521 கோடியை இத்தகைய நிறுவனங்களுக்கு கடனாக வங்கிகள் தொடர்ந்து வழங்கியுள்ளன.