Random image

மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் மீதான ஊழல் விசாரணைக்கு குஜராத் அரசு இடையூறு

டில்லி:

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக பதவி வகித்தவர் கேட்டன் தேசாய். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக கவுன்சிலை அரசு கலைத்தது. கேட்டன் தேசாய் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில் முதல் குற்றவாளியாக தேசாய் சேர்க்கப்பட்டுள்ளார்.

2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 142 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் இவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், தேசாய் மீதான குற்றச்சாட்டு குறித்து அவரிடம் விசாரிக்க முடியாத நிலை சிபிஐ.க்கு ஏற்பட்டுள்ளது. அரசு பதவியில் குறிப்பிட்ட அந்தஸ்தில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்த சம்மந்த அரசு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். இந்த வகையில் தேசாயிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ குஜராத் அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஆனால். குஜராத் அரசு இதற்கு தொடர்ந்த மறுத்து வருகிறது.

சமீபத்தில் பட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணையின் போது குஜராத் அரசு மறுப்பு தெரிவித்த உத்தரவு நகலை சிபிஐ தாக்கல் செய்தது. முன்னதாக சம்மந்தப்பட்ட துறை அனுமதி பெறாமல் விசாரணை மேற்கொள்ளக் கூடாது என்று தேசாய் தரப்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து அரசு அனுமதியின்றி அவரிடம் விசாரணை நடத்தக் கூடாது என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அனுமதி அளிக்க குஜராத் அரசு தொடர்ந்து மறுத்து வருவதால் சட்ட நடவடிக்கைகளில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் கேட்டன் தேசாய் 8 ஆண்டுகளாக தப்பித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.