மகாராஷ்டிராவை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரம்…. பொறுப்பாளராக மல்லிகார்ஜூன கார்கே நியமனம்

மும்பை:

2019 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பழம்பெறும் கட்சியான காங்கிரஸ் தயாராகி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை உத்தரபிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்துக்கு தேசிய கட்சிகள் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம்.

இந்த வகையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ்வாடி ஆகிய முக்கிய கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை காங்கிரஸ் மறைமுகமாக மேற்கொள்ள தொடங்கிவிட்டது.

அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வேலையை காங்கிரஸ் தொடங்கிவிட்டது. இந்த மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக.வுக்கும் அதன் பழமையான கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் இடையே தற்போது மோதல் நிலவி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டது.

இதற்கு அச்சாரம் போடும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மாநில பொறுப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக அங்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி விரைவில் இறுதி செய்யப்படவுள்ளது. இங்கு நடக்கும் கூட்டணி தொடர்பான முன்னேற்றங்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூர்மையாக கவனித்து வருகிறார்.

பாரம்பரியமாக காங்கிரஸ் மாநிலமாக இருந்த மகாராஷ்டிரா படிப்படியாக கடந்த 30 ஆண்டுகளில் தனது ஆதிக்கத்தை இழந்து வந்துள்ளது. 1995ம் ஆண்டில் பாஜக&சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு வந்து காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை ஆட்டியது. 2014ம் ஆண்டு வீசிய மோடி அலையில் மகாராஷ்டிராவில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளும், இதை தொடர்ந்து சட்டமன்ற தொகுதிகளும் பாஜக&சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மையை ஏற்படுத்திக் கொடுத்தது.

காங்கிரஸ் 2 லோக்சபா தொகுதிகளிலும், 42 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 4 லோக்சபா தொதிகள், 41 சட்டமன்ற தொதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் 15 ஆண்டுகள் நீடித்த காங்கிரஸ்&தேசியவாத காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது.

75 வயதாகும் கார்கேவுக்கு 2வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் டில்லி அரசியலில் முக்கிய வாய்ப்பு கிடைத்தது. லோக்சபா காங்கிரஸ் கட்சி தலைவராகவும், ரெயில்வே மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். மகாராஷ்டிராவில் சிவசேனாவின் அதிருப்தியால் அங்கு காங்கிரஸ் கட்சிக்கான அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இந்த சமயத்தில் கார்கே சரியான நேரத்தில் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.