டில்லி:

அருணாச்சல பிரதேசத்திற்கு என்று தனி மாநில ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃஎப்எஸ் பணி நிலையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் சட்டமன்றத்தில் கடந்த 18ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் மீது முதல்வர் பேமா காண்டு பேசுகையில், ‘‘ 30 ஆண்டுகளுக்கு பிறகு மாநில உரிமையை பெற உரிய நேரம் ஏற்பட்டுள்ளது. தனி மாநில பணி நிலை என்பது மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கு உண்மையான, உணர்வுப்பூர்வமான வளர்ச்சி கிடைக்க வழிவகை செய்யும். மாநிலத்திற்கு என்று தனி பணி நிலை அதிகாரிகள் இல்லாததால் மத்திய அரசின் திட்டங்களை முறையாக அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து இங்கு குறுகிய காலத்திற்கு வரும் அதிகாரிகளால் மலைவாழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் மாநிலத்தின் நலன் கருதி அர்ப்பணிப்பு மனப்பான்மை கொண்ட அதிகாரிகளை நியமனம் செய்வது தற்போதைய அவசர தேவையாக உள்ளது’’ என்றார்.

அருணாச்சல பிரதேச மாநிலம் தற்போது அகில இந்திய சேவை குழுமத்தில் அருணாச்சல், கோவா, மிசோராம், இதர யூனியன் பிரதேச பட்டியலில் உள்ளது. இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்பு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பணியாளர் மற்றும் பயிற்சி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் கடந்த மாதம் 13ம் தேதி முதல்வர் காண்டு ஆலோசனை மேற்கொண்டார்.

அருணாச்சல பிரதேசத்தில் மட்டும் முதன்முதலாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்த குழுமத்தில் உள்ள கோவா, மிசோராம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதில் கடைசியாக அருணாச்சல பிரதேசமும் இணைந்துள்ளது. மிசோராம், கோவா ஆகிய மாநிலங்கள் 1987ம் ஆண்டில் உருவானவை. மிசோராம் 2வது முறையும், கோவா 3வது முறையாகவும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.