ஜெ. 3முறை எம்.பி.யாக்கினார்: மாநிலங்களவையில் ‘ஒப்பாரி’ வைத்த மைத்ரேயன்

டில்லி:

திமுகவைச் சேர்ந்த மைத்ரேயனுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க அதிமுக தலைமை மறுத்துவிட்ட நிலையில், இன்று மாநிலங்களையில் இறுதி உரை ஆற்றினார்.

அப்போது, கண்ணீர் மல்க பேசியவர், தனக்கு 3 முறை எம்.பி. பதவி வழங்கினார் ஜெயலலிதா என்று கூறியவர், நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்றும் கண்ணீரோடு கேட்டுக்கொண்டார்.

மாநிலங்களவை அதிமுக எம்.பி.யாக உள்ள மைத்ரேயனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடை கிறது. இதையொட்டி இன்று ராஜ்யசபாவில்  இறுதி உரையாற்றினார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை குறிப்பிட்டு பேசினார்.  ‘‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா என் மீது மிகுந்த அன்பு காட்டினார். என் மீது நம்பிக்கை வைத்து 3 முறை மாநிலங்களவை எம்.பி.யாக்கினார். இது வேறு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. அவரை இந்த நேரத்தில் எண்ணிப் பார்ககிறேன்’’ என கண்ணீர் விட்டு அழுதார். அவரை சக எம்பிக்கள் தேற்றினர்.

தொடர்ந்து பேசியவர், தற்போது எனக்கு சூரியன் அஸ்தமிக்கும் நேரம் என்று கண்ணீரோடு தெரிவித்தவர்,  இலங்கை தமிழர்கள் படுகொலை குறித்து மாநிலங்களவை பரிசீலிக்கவோ, இரங்கல் தெரிவிக்கவோ இல்லை, நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என கூறினார்.

மைத்ரேயன் 15 ஆண்டுகாலம் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தும், தமிழக மக்களுக்கோ, தமிழகத்திற்கோ குறிப்பிட்டு சொல்லும்படி ஏதும் நன்மைகள் செய்யாத நிலையில், மீண்டும், எம்.பி. பதவிக்காக அதிமுக தலைமையிடம் முறையிட்டு வந்தார்.

ஆனால், அவரது கோரிக்கை எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையால் ஏற்கப்படாத நிலையில், ஜெ. 3 முறை என்னை எம்.பியாக்கினார் என்று அழுதுகொண்டே ராஜ்யசபாவில் பேசி, உறுப்பினர்களின் இரக்கத்தை பெற்றுள்ளார்.

ராஜ்யசபாவில் மைத்ரேயன் அழுதது, தனக்கு மீண்டும் பதவி தர அதிமுக தலைமை  மறுத்ததற் காகவா, அல்லது ஜெயலலிதா இல்லையே என்பதற்காக? என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மைத்ரேயன் ஏற்கனவே பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.