பெங்களூரு:

விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று கவர்னர் வஜுபாய் வாலாவுக்கு சபாநாயகர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்று முதல் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவுக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் இல்லையேல் இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கும், முதல்வருக்கும்  மாநில கவர்னர் வஜுபாய்வாலா உத்தரவிட்டிருந்தார்.

அதேவேளையில்,  கவர்னரின் உத்தரவை எதிர்த்து குமாரசாமி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், 2வது நாளாக இன்றும் விவாதங்கள் தொடர்ந்து வருகிறது.

சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் குமாரசாமி, மாநில சட்டமன்றத்தை  கட்டுப்படுத்தும் அதிகாரம்  கவர்னருக்கு கிடையாது என்றும்,  சபை விவாதங்கள் முடிந்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளில்தான் வாக்கெடுப்பு நடக்கும் என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா,  ஆளுநரின் உத்தரவை சட்டப்பேரவையில் எடியூரப்பா சுட்டிக்காட்டினார்.

அதற்கு பதில் அளித்த சபாநாயகர், விவாதம் முடிந்த பிறகே குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும், அதற்கு முன்பாக நடத்த முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறிய  முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் திங்கள் கிழமை வரை தொடர வாய்ப்பு இருப்பதாகவும்,  இன்னும் 20 உறுப்பினர் கள், தீர்மானத்தின் மீது பேச இருப்பதால், திங்கள் கிழமை வரை விவாதம் தொடரும் என்றும் தெரிவித்து உள்ளார்.

நாளை, மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை என்பதால், அதற்குள் அதிருப்தி எம்எல்ஏக்களை சாந்தப்படுத்தி, ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியாக, கர்நாடக மாநில  அரசியல் நடைபெற்று வருகிறது.