மதுரை:

சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 துப்பாக்கிகள், மதுரை விமானநிலையத்தில் பிடிபட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் மதுரை கப்பலூர் டோல்கேட்டில் பணம் கேட்டதற்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தி ஊழியர்களை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தொடர்புடைய 3 பேரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், மதுரை விமானநிலையத்தில் துபாயிலிருந்து கொண்டுவரப்பட்ட 23 துப்பாக்கிகள் பிடிபட்ட நிலையில், அதன் முதற்கட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது.

கடந்த 22-ம் தேதி துபாயிலிருந்து மதுரைக்கு விமானத்தில் காலிக் முகமது, முனீஸ்ப்பு, அஜ்மல் ஆகிய மூன்று நபர்கள் 23 துப்பாக்கிகளை மறைத்துவைத்து கொண்டுவந்துள்ளனர்.

அப்போது பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு இயந்திரங்களைக் குறிப்பிட்ட இந்த 3 நபர்களும் கடந்தபோது அபாய ஒலியை வெளிப்படுத்தியுள்ளது. இதைக்கண்ட அதிகாரிகள் 3 நபர்களைச் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர்.

அவர்களிடம் 23 துப்பாக்கிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார், துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 23 துப்பாக்கிகளும் சுமார் 17 லட்ச ரூபாய் எனத் தெரியவந்தது.

சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், “இந்தத் துப்பாக்கிகள் இந்திய துப்பாக்கிச் சுடு விளையாட்டுக்கழகத்தில் பதியப்பட்டவை எனவும், இது துப்பாக்கிச்சூடு போட்டிக்காக மட்டும் பயன்படுத்தும் துப்பாக்கி” என்றும் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து அதிகாரிகள், அவர்கள் எந்தத் துப்பாக்கி கழகத்தில் பதிந்துள்ளனர் என்று ஆராய்ந்தனர். அப்போது அவர்கள் தெரிவித்த தகவல் பொய்யானது எனவும் எந்தத் துப்பாக்கி கழகத்திலும் அவர்கள் பதியவில்லை என்பதும் தெரிய வந்தது.

`துப்பாக்கியை எதற்காக துபாயிலிருந்து கடத்தி வந்துள்ளனர்… இது விளையாட்டுப் போட்டிக்குப் பயன்படுத்தும் துப்பாக்கியா… இல்லை வேறு வகையைச் சேர்ந்த துப்பாக்கியா…. இவர்கள் எதற்காக இந்தத் துப்பாக்கியைக் கொண்டு செல்கின்றனர்… இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது…’ என சுங்கத்துறை அதிகாரிகள் பல கண்ணோட்டத்தில் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-பொதிகை குமார்