சென்னை :

மிழகம் முழுவதும் வரும் 30 ம் தேதி வரை ஊரடங்கை நீடித்திருக்கும் நிலையில், கடந்த மார்ச் மாதம் 24 ந் தேதி முதல் வேலையிழந்து செய்வதறியாது சிலையாய் நிற்கும் தொழிலாளர்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் நிலை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.

தமிழகத்தின் சிவகாசி, கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை, நூற்பு மற்றும் ஜவுளி ஆலைகள், கட்டுமானம், செங்கல் சூளைகள் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, ஊரடங்கு அமல்படுத்தி மூன்று வார காலம் ஆன நிலையிலும் இதுவரை அவர்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கி கூட பெரும்பாலோனருக்கு வரவில்லை.

இந்த துறைகளில் ஒப்பந்த தொழிலாளர்களே மொத்த தொழிலாளர்களில் 93% பேர் உள்ளனர், இவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள், பலர் குடும்பமாக ஒரே இடத்தில் வேலை செய்தும் வருகின்றனர். குறைந்த பட்ச வார கூலியாக 1600 ரூபாய் சம்பாதிக்கும் பலர், தற்போது அது கூட கிடைக்காததால் தங்களது குழந்தைகளுக்கு உணவளிக்க கூட முடியாத நிலையில் உள்ளனர்.

அரசு வழங்கிய ரூ. 1000 நிவாரண தொகையிலும், அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டே வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் ரேஷன் கடையில் வழங்கிய அரிசி தரமற்றதாக இருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில்.

இவர்களின் துயரை போக்க நிவாரண நிதியை சற்று உயர்த்தியும் தரமான பொருட்களையும் வழங்கவும் பல்வேறு தொழிலாளர் நல அமைப்புகள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் இரு வாரங்களுக்கு நீடித்துள்ள நிலையில் இவர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்று தொழிலாளர்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.