முன்பதிவில்லாத 8 தீபாவளி சிறப்பு ரயில்கள்: ரயில்வே பொதுமேலாளர் அறிவிப்பு

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில்,  சென்னையில் இருந்து நெல்லை, கோவைக்கு  8 முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக  ரயில்வே பொதுமேலாளர் ரயில் பார்ட்னர் செயலி அறிமுக நிகழ்ச்சியில் கூறினார்.

சென்னையில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் ‘ரெயில் பார்ட்னர்’ எனப்படும் செயலி அறிமுக நிகழ்ச்சி நடந்தது. அதை அறிமுகம் செய்து வைத்துபேசிய  ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டா,

‘ரெயில் பார்ட்னர்’ செயலி மூலம் ரெயில்கள் புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், பாதுகாப்பு உதவி எண், ரெயில் பயணத்தின் போது தேவையான வசதிகள், தேவைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். மேழம் 20 முக்கிய தேவைகளுக்கான நேரடி அழைப்பு வசதிகள் கொடுக்கப்படும். இந்த செயலி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தற்போது நடைபெற்று வரும்,  தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக 18 சிறப்பு ரயில்களும், தசரா பண்டிகைக்காக 33 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது என்று கூறினார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 42 சிறப்பு ரயில்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளதாக வும்,  இந்த ரயில்கள் சென்னையில் இருந்து திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கோவைக்கு விடப்படுகின்றன என்பதையும் தெரிவித்தார்.

மேலும், தீபாவளி  நெருக்கும் சமயத்தில் ஏற்படும் பயணிகளின் நெரிசலை தவிர்க்கும் வகையில், 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், இவற்றுள்  சென்னை- நெல்லைக்கு 4 சிறப்பு ரெயில்களும், சென்னை- கோவைக்கு 4 சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்