புதுச்சேரி:

முதல்வர் நாராயணசாமி  ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்ட விவகாரத் தில் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமி ,இடையே டிவிட்டரில் காரசாரமான மோதல் நடைபெற்றது. இது சிறுபிள்ளைத்தனமானமாக இருப்பதாக  சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் தொண்டர்களுடன்  இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் எவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றனர்.

இது தொடர்பான புகைப்படம் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியானது. நாடு முழுவதும் ஹெல்மெட் சட்டம் அமலில் உள்ள நிலையில், மாநில முதல்வர்  நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் இருச்சகர வாகனப் பேரணி நடத்தியது சர்ச்சைக்குள்ளானது.  சமூக வலைதளங்களிலும் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, நாராயணசாமி ஹெல்மெட் அணியாமல் சென்றதை சுட்டிக் காட்டி அவரது சமூகவலைதள பக்கத்தில், படத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டார் .

அதில், ‘காமராஜ் நகர் பிரச்சாரத்தின்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற முதல்-மந்திரி நாராயணசாமி மீது மோட்டார் வாகனச் சட்டப்படி காவல்துறை தலைவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியறுத்தி இருந்தார்.

முதல்வர்  தேர்தல் பிரச்சாரத்தின்போது நாராயணசாமியின் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த புகைப்படங் களைப் பகிர்ந்த பேடி, “நாராயணசாமியின் வெட்கக்கேடான சட்டமீறல் மற்றும் மாண்புமிகு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிரான. புதுச்சேரி டிஜிபி  பாலாஜி ஸ்ரீவாஸ்தவா, ஐபிஎஸ் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளார்.

மற்றொரு பதிவில், நாராயணசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில்,. “இந்த நேரத்தில் திரு முதல்வர் நீங்களும் உங்கள் கூட்டாளிகளும் சட்டத்தை கேலி செய்ததற்காக அபராதம் செலுத்த வேண்டும். புதுச்சேரி முதல்வர் சட்டத்தைத் தடுத்து, சட்டத்தை மீறி வருகிறார். இதன் காரணமாக இது பல ஆபத்தான மற்றும் காயம் விபத்துக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.  நீதித்துறை இத்தகைய தடைகளை கவனத்தில்  கொள்ள வேண்டும் என்று என்றும் கிரண்பேடி டிவிட் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் தெரிவித்து, முதல்வர் நாராயணசாமி தனது டிவிட்டர் பக்கத்தில்,, கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்திருந்தார். அதில், மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன்பு நீங்கள்  சரியாகஇருங்கள் என்று கூறி ஒரு படத்தை பதிவிட்டிருந்தார்.

அத்துடன்,   இரு சக்கரவாகனத்தில் செல்லும் போது ஆளுநர் கிரண்பேடியும் ஹெல்மெட் அணிய வேண்டும். இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றவரிடமும் ஹெல்மெட் அணியுமாறு கிரண்பேடி கேட்டிருக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்தினர் தங்கள் சொந்த முதல்வருக்கு எதிராக செயல்படுமாறு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டதையடுத்து, புதுச்சேரி முதல்வர் வி நாராயணசாமி லெப்டினன்ட் கவர்னர் கிரண் பேடி  இடையிலான வார்த்தைகளின் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.

முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நடைபெற்று வரும் டிவிட்டர் மோதல் சமூக வலைதளங்களில் வலைதளவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இருவரின் மோதலும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்றும், நாட்டின் வளர்ச்சிக்கான பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், வெட்டியாக ஹெல்மெட்டை கையில் எடுத்து இருவரும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது…