சாட்சிகள் பாதுகாப்பு மசோதா: உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

டில்லி:

த்திய அரசின் சாட்சிகளின் பாதுகாப்புத் திட்டத்திற்கு இன்று உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் அதற்கான சட்டம் கொண்டு வரப்படும் வரை அத்திட்டத்தை அமல்படுத்தும் பணிகளை தொடங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாட்சியம் அளிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேசிய புலனாய்வு ஏஜென்சி சட்டத்தில் உள்ளது போல் சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி, மத்திய அரசு வரைவு திட்டம் உருவாக்கி, மாநிலங்களுக்கு அனுப்பி கருத்து கேட்டது. அந்த வரைவு மசோதாவிற்கு தற்போது உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு, இந்த திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சாட்சி பாதுகாப்பு திட்டமானது, மேல் நீதிமன்றத்தில் ஆசாரம் பாபு மீதான பாலியல் பலாத்கார வழக்கில் சாட்சிகளை பாதுகாக்கும் நோக்கில் ஒரு பொது நல வழக்கு விசாரணையை விசாரித்தபோது உதித்த திட்டமாகும்.

இந்த திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர் அமர்வில், கடந்த நவம்பர் 19ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், “சாட்சிகள் பாதுகாக்கும் வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது இனிமேல் சட்டமாக்கப்படும். அதுவரை சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தும் பணிகளை தொடங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.

தற்போது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதுகுறித்து பதிலளித்த பிறகு இந்த திட்டத்தை இறுதி செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.