பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் சபரிமலை செல்ல கொச்சி வருகை : ஆதரவாளர் மீது மிளகாய்ப் பொடி வீச்சு

கொச்சி

பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் சபரிமலை செல்ல கொச்சி விமான நிலையம் வந்துள்ள நிலையில் அவர் ஆதரவாளர் மீது மிளகாய்ப்பொடி வீசப்பட்டுள்ளது.

கடந்த வருடம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  அப்போது பெண் ஆர்வலரான திருப்தி தேசாய் தனது ஆதரவாளர்களுடன் சபரிமலைக்குச் செல்ல கேரளா வந்தனர்.  ஆயினும் அங்கு நடந்த போராட்டம் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவில் சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் இந்த மனுவை 7 பேர் கொண்ட அமர்வு விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட  போதிலும் முந்தைய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை.   எனவே  பல பெண்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.  ஆயினும் இந்த ஆண்டு கேரள அரசு சபரிமலைக்கு வரும் பெண்களை அனுமதிக்க மறுத்துத் திருப்பி அனுப்பி வருகிறது.

இந்நிலையில் இந்த வருடம் சபரிமலை செல்ல திருப்தி தேசாய் இன்று கொச்சி வந்துள்ளார்.  அவர் இன்று அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட நாள் எனவும் தாங்கள் சபரிமலை செல்ல உள்ளதாகவும் அதை காவல்துறையினரும் அரசும் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.  அத்துடன் தங்களைத் தடுத்தால் நீதிமன்றத்தை நாட உள்ளதாக எச்சரிக்கை விடுத்தார்.

திருப்தி தேசாயின் ஆதரவாளரான பிந்து அம்மணி ஏற்கனவே சென்ற வருடம் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார்.  அவர் இன்று கொச்சி நகர் காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே திருப்தி தேசாயுடன் வந்துக் கொண்டிருந்தார்.  அப்போது அவர் மீது மர்ம நபர்கள் மிளகாய் பொடியை வீசி உள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.