சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதை ஆதரிக்கிறோம்!: பந்தள மன்னர் அறிவிப்பு

யதுபேதம் இன்றி சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் மகரதீபம் அன்று  பந்தள அரண்மனையில் உள்ள ஆபரணப்பெட்டியை ஐயப்பன் சந்நிதானத்துக்கு அனுப்ப முடியாது என்று தான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூகவலைதளங்களில் பரவிய தகவலை  பந்த மன்னர் சசிகுமார் வர்மா மறுத்துள்ளார்.

சபரிமலையில் 10 முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில், வயதுபேதமின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், உச்சநீதிமன்ற உத்தரவை விரைவில் அமல் படுத்த வேண்டும் என்று கேரள தேவசம்போர்டுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சபரிமலையில் பெண்களுக்கு என தனியாக கழிவறை மற்றும் குளியலறை கட்டப்படும் என்றும் அப்பகுதிக்குச் செல்லும் பேருந்துகளில் 25% இருக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பந்தள மன்னர், “சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் ஆபரணப்பெட்டிகளை ஐயப்பன் சந்நிதானத்துக்கு அனுப்பமாட்டோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு பதிவு வேகமாக பரவி வருகிறது.

 

ஆபரணப்பெட்டி என்றால் என்ன?

ஐயப்பனை பம்பை நதிக்கரையில் எடுத்து வளர்த்ட்டிதனஇ பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் என்பது புராணம். இவர் தனது வளர்ப்பு மகன் ஐயப்பனை அரசராக்க நினைத்தார். ஆனால் ஐயப்பனோ தனது 12 வயதிலேயே துறவறம் பூண்டார். இதனால் அதிர்ந்த மன்னர், “சரி, , படைத்தளபதி அந்தஸ்தையாவது ஏற்றுக்கொள்” என்று ஐயப்பனிடம் மன்றாடினார். இதனால் ஐயப்பனும் ஒப்புக்கொண்டார். படைத்தளபதிக்கு ஏற்ற சிகை அலங்காரம் செய்துகொண்டார்: உடை அலங்காரங்களை அணிந்தார்.

மேலும், சந்நியாசம் மேற்கொண்டு வனத்துக்குச் செல்லும் தன்னை வருடத்துக்கு ஒரு முறை தந்தை வந்து பார்க்கலாம் என்று தெரிவித்தார்.

அதுதான் மகரஜோதி ஏற்றப்படும் நாள்.

மகன் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்களை பூட்டி அழகு பார்க்கவேண்டும் என்ற ஆசையில் வருடந்தோறும் பந்தள அரண்மனையில் இருந்து மூன்று பெட்டிகளில் ஆபரணங்களை எடுத்துச் செல்வார் மன்னர்.

மகரஜோதி அன்று மட்டும் அவற்றை அணிந்து காட்சியளிப்பார் ஐயப்பன்.

இந்த ஐதீகம் இன்றும் தொடர்கிறது. பந்தள அரச பரம்பரையினர் இப்போதும் வருடத்துக்கு ஒருமுறை மகரதீபம் அன்று அரண்மனையில் இருந்து ஆபரணங்களை மூன்று பெட்டிகளில் எடுத்துச் செல்வார்கள். அவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

உண்மை என்ன?

இந்த நிலையில்தான் பந்தள அரச வாரிசான தற்போதைய மன்னர், சசிகுமார் வர்மா “சபரிமலையிலுள்ள பதினெட்டாம்படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் பந்தள அரண்மணையிலுள்ள ஆபரணபெட்டி சபரிமலை சந்நிதானம் வராது.

சபரிமலை ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம். ஐயப்பனுக்குரிய ஆபரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும்.

ஆகவே எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.

மேலும், பெண்கள் நுழைந்த சபரிமலையில் இனி பந்தள மன்னரின் குடும்பத்தினரும் வரமாட்டார்கள் என இந்த அறிவிப்பின் மூலம் தீர்மானமாக அறிவிக்கிறோம்” என அரசுக்கும் தேவஸ்தானத்திற்க்கும் அறிக்கை அனுப்பியுள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு பதிவு பரவி வருகிறது.

ஆனால் அதை பந்தள மன்னர் சசிகுமார் வர்மா மறுத்துள்ளார்.

அவர், “சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிர்க்கும் விதத்தில் ஐயப்ப சாமிக்கு அணிவிக்கும் திரு ஆபரணங்களை வழங்க முடியாது என்று பந்தள அரண்மனை கூறியதாக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரம் செய்வதாக அறிகிறோம். இது அடிப்படை ஆதாரமில்லாத தவறான செய்தி என பந்தளம் அரண்மனை தெரிவிக்கிறது.

ஐயப்பனுக்கு அணிவிக்கும் திரு ஆபரணங்கள் சன்னிதானத்தில் கொண்டு சேர்ப்பதில் எந்த வித மாறுதலும் இல்லை. சபரிமலை சாமிக்கு செய்யும் ஆச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்த அரண்மனை நிர்வாகம் தீர்மானிக்கவில்லை.

தவறான பிரச்சாரங்களை யாரும் நம்ப வேண்டாம் என அரண்மனை நிர்வாக கேட்டு கொள்வதோடு, இவ்வாறான வதந்தியை பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்” என்று பந்தள மன்னர் சசிகுமார் வர்மா தெரிவித்துள்ளார்.