15 கோடி ரூபாய் சொத்துக்காக கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை பெண்மணி கொன்றது மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் கல்யான் டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர் கைக்வாட்(வயது 44). இவரது மனைவி ஆஷா கைக்வாட்(வயது 40),

தனது கணவரை கடந்த மே மாதம் 18-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று ஆஷா, காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஷங்கர் கைக்கவாட்டை தேடிவந்தனர். இந்த நிலையில் ஷங்கர் கைக்வாட் மாயமானதில் அவரது மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என ஷங்கரின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.  இதையடுத்து காவல்துறையினர் இந்த கோணத்திலும் விசாரிக்க தொடங்கினப், ஆஷா கெய்க்வாட்டின் கைபேசி அழைப்புகளை ஆய்வு செய்தனர்.

அதில் சந்தேகத்திற்கிடமான சிலருடன் ஆஷா பேசிவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், தானே தனது கணவரை கொன்றதை ஆஷா ஒப்புக்கொண்டார்.

தனக்கு சொந்தமாக இருந்த ஏராளமான சொத்துகளை ஆஷாவின் பெயருக்கு ஷங்கர் ஏற்கனவே எழுதி வைத்திருந்தார். அவரிடம் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ஆஷா வற்புறுத்தி வந்திருக்கிறார்.

அது தந்தையின் மூலம் தனக்கு கிடைத்த சொத்து என்பதால் அதை ஆஷாவுக்கு எழுதித்தர ஷங்கர் மறுத்து விட்டார். அந்த சொத்தினையும் அடைய விரும்பிய  ஆஷா, கூலிப்படையினரின் துணையுடன் கணவர் ஷங்கரை கொன்றுவிட திட்டம் தீட்டினார்.

இதற்காக, கூலிப்படையை சேர்ந்த ஹிமான்ஷு துபே என்பவரை தொடர்புகொண்ட ஆஷா, கணவரை தீர்த்துக்கட்ட 30 லட்சம் ரூபாய் பேரம்பேசி, 4 லட்சம் ரூபாயை முன்பணமாக அளித்தார்.

கடந்த மே மாதம் 18-ம் தேதி கணவர் ஷங்கரை ஆட்டோ ரிக்‌ஷா மூலம் பாதல்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்று, குளிர் பாணத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். ஷங்கர் சுயநினைவை இழக்க தொடங்கியவுடன், ஹிமான்ஷு துபே மற்றும் அவருடன் வந்த 4 பேர் உதவியுடன் ஷங்கரை இரும்புக் கம்பிகளால் தாக்கிக் கொன்ற ஆஷா, அவரது உடலை ஒதுக்குப்புறமான பகுதியில் தூக்கிவீசி எறிந்தார்.

பிறகு, கல்யான் டவுன் ஷிப் பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்துசேர்ந்த ஆஷா, தனது கணவர் காணாமல் போனதாக   நாடகமாடி காவல்துறையில் புகார் அளித்தார்.

ஆஷா குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரையும், இந்த கொலையில் உடந்தையாக இருந்த ஹிமான்ஷு துபே ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.   தலைமறைவாக இருக்கும் ஹிமான்ஷு துபேவின் கூட்டாளிகள் 4 பேரை தேடி வருகின்றனர்