கோவை: திமுகவின் கோவை மககள்  கிராமசபை கூட்டத்தில், திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேள்விக்கேட்ட பெண், அங்கிருந்த கட்சியினரால் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதுகுறித்து,  தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத்தொகுதியில் உள்ள தேவராயபுரம் பகுதியில் ஜனவரி 2ந்தேதி திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம்   நடைபெற்றது. அங்கு பேசிய  ஸ்டாலின், “தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட கோவையில் ஊழல் அதிகமாகவுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களை செய்து வருகின்றனர். அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆவணங்களோடு நிரூபிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அடுத்த நான்கு மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்ததும், வேலுமணி செய்த ஊழல்களை நிரூபித்து தண்டனை பெற்று தருவோம்” என்றார்.

அப்போது,  அந்த கூட்டத்தில் பங்கேற்ற கோவை மதுக்கரைப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அமைச்சர் வேலுமணி குறித்து ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்து குறுக்கிட்டுப் பேச முயன்று தகராறு செய்தார். அந்த பெண்ணிடம், ஸ்டாலின் ‘எந்த தொகுதியை சேர்ந்தவர் நீங்கள்’ என ஸ்டாலின் அவரிடம் கேட்டார். அதற்கு தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி என பதிலளித்தவர், அருகில் உள்ள ஊரில் இருந்து வந்ததாக கூறினார்.

அந்த ஊர் எங்கிருக்கிறது என ஸ்டாலின் கேட்டபோது ‘எங்கு இருக்கிறது என தெரியாமல், எதற்கு கிராம சபைக் கூட்டம் நடத்துகிறீர்கள்’ என கோபமாக கேட்டார் அந்தப் பெண்.  இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது பேசிய ஸ்டாலின், ‘இவர் வேலுமணி அனுப்பி வைத்த நபர், அவரை காவல்துறையினரிடம் ஒப்படையுங்கள்’ என கூறினார்.பின்னர் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘திமுகவின் கூட்டத்தில் தகராறு செய்ய அமைச்சர் வேலுமணி இப்படி செய்வார் என்று எனக்கு முன்னரே தெரியும். திமுகவினரும் இப்படி இறங்கினால் அதிமுகவின் எந்த கூட்டமும் நடக்காது.’ என பேசினார். இதனால், உடனடியாக கூட்டத்திலிருந்து பெண்ணை வெளியேற்றிய திமுகவினர், அவரை சரமாரியாக தாக்கி  காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அந்த பெண், அமைச்சர் வேலுமணியால் அனுப்பப்பட்டவர் என்ற தகவல்கள் பரவின. அவர் வேலுமணியுடன் இருக்கும் புகைப்படங்களும் வைரலாகின.  ஆனால், அந்த பெண் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச்சேர்ந்தவர், அரசியல் தொடர்பாக அவர் அதிமுக அமைச்சர்களை சந்தித்ததாக  தகவல் பரவின. இதை விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் மறுக்கவும், ஒப்புக்கொள்ளவும் இல்லை.

அதுபோல மேலும் பல இடங்களிலும், திமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பல பெண்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.   தாக்குதலுக்குள்ளான பெண்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் எஎன்பதால், ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர்  தேசிய தாழ்த்தபட்டோர் ஆணையத்தில், இது தொடர்பாக புகார் அளித்தார். மேலும்,  தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது் எஸ்.சி எஸ்.டி பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக வரும் 15 நாட்களுக்குள் தமிழக டி.ஜி.பி மற்றும் கோவை மாவட்ட எஸ். பி அருளரசு ஆகியோர் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக டி.ஜி.பி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.