1500 பக்தர்களுடன் சத்சங்க கூட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்ணுக்கு கொரோனா

ல்லாஸ் நகர்

ல்லாஸ் நகர் ஆசிரமம் ஒன்றில் 1500 பேருடன் சத்சங்க கூட்டத்தில் கலந்துக் கொண்ட துபாயில் இருந்து வந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மாதிரிப் புகைப்படம்

உல்லாஸ் நகரைச் சேர்ந்த ஒரு 49 வயதுப் பெண் தனது உறவினர்கள் ஐந்து பேருடன் துபாய் சென்று  இந்த மாதம் 4 ஆம் தேதி அன்று மும்பை வந்து அங்கிருந்து உல்லாஸ் நகர் வந்துள்ளார்.  வந்ததில் இருந்தே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.   இந்நிலையில் அங்குள்ள ஆசிரமத்தில் 8 ஆம் தேதி சத்சங்க கூட்டம் நடந்துள்ளது.

உடல்நிலை சரியில்லாத போதிலும் அந்தப் பெண் அக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்.  அந்த சத்சங்க கூட்டத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர்  கலந்துக் கொண்டுள்ளனர்.  அதன் பிறகு வீட்டுக்கு வந்தவுடன் அவர் உடல்நிலை மேலும் சீர் கெட்டுள்ளது.  அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அந்த மருத்துவமனையின் அறிவுரைப்படி கஸ்தூரிபா அரசு மருத்துவமனைக்கு அவர் சென்றுள்ளார்.  அங்கு அவருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளது கண்டறியப்பட்டது.   அதையொட்டி அவரும் அவருடன் பயணம் செய்த ஐந்து உறவினரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.  அவருடைய வீடு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த 15 நாளில் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தேடும் பணி நடந்து வருகிறது.