சென்னை: பல் மருத்துவம் படித்த பெண் ஒருவர், பல் மருத்துவ மாணாக்கர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்யாமலேயே, டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடமிருந்து பல் மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; பிரியதர்ஷினி பல் மருத்துவக் கல்லூரியில் படித்தவர் கரிஷ்மா இர்ஃபான் என்ற பெண். இவர், தனது பேறுகால விடுமுறையின் பொருட்டு, தனது கட்டாய இன்டர்ன்ஷிப்பை நிறைவுசெய்ய இயலாத நிலையில், கல்லூரி நிர்வாகத்திற்கு மன்னிப்புக் கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும், அவருக்கு பல் மருத்துவப் பட்டம் பெறுவதற்கான தகுதி கல்லூரியால் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மன்னிப்புக் கடிதம் குறித்த விபரங்களை சமீபத்தில் மருத்துவப் பல்கலைக்கழக அலுவலர்கள் கண்டறிந்தனர். கரிஷ்மா இர்ஃபான் மகப்பேறு விடுப்பில் இருந்த காலகட்டமும், இன்டர்ன்ஷிப் மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்ட காலகட்டமும் ஒன்றாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அப்பெண்மணிக்கு பல் மருத்துவப் பட்டமும் வழங்கப்பட்டுவிட்டது.

எனவே, பல் மருத்துவப் பட்டத்தை திருப்பி வழங்குமாறும், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்குமாறும் கரிஷ்மாவிடம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு மாணாக்கருக்கும் பட்டம் வழங்கும் முன்பாக, அவர்களின் பதிவுப் புத்தகத்தை கவனமாக ஆராய வேண்டுமென இந்திய பல் மருத்துவக் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.