லக்னோ

உத்திரப் பிரதேசத்தில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் முன்னி பேகம் என்னும் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகரை துப்பாக்கியால் அவர் வீட்டு வாசலில் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பட்டப்பகலில் அவர் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிந்ததே.    அதே போல தற்போது உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.   அது குறித்த விவரங்களை உத்திரப் பிரதேச காவல்துறை அதிகாரி ஜெயப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

முன்னி பேகம் என்னும் உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் கேத்திபூர் காலனி பகுதியில் வழித்து வருகிறார்.   இவர் முன்பு நகரசபை உறுப்பினராக பதவி வகித்தவர்.   கடந்த 2017 ஆம் வருடம் இவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றுள்ளது.   அதற்கு முன்பு 2012 ஆம் வருடம் இவர் மீதும் இவர் மகன் முகமது நபீஸ் மீதும் துப்பாக்கி தாக்குதல் நடந்துள்ளது.   தற்போது இவர் தனக்கு போலீஸ் காவல் கேட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் வீட்டுக்கு வெளியே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் முன்னி பேகத்தை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.    அவர் மார்பில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்து அவர் அங்கேயே மரணம் அடைந்துள்ளார்.    அவரைக் கொன்ற மர்ம நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து உத்திரப் பிரதேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரிபாதி, “அரசு என்கவுண்டர் என்னும்  பெயரில் நாடகம் நடத்தி வருவது அம்பலம் ஆகி உள்ளது.    யோகி ஆட்சியில் காவல்துறையினர் அரசுக்கு வேண்டியவர்களை ஒன்றும் செய்வதில்லை.   அரசுக்கு எதிராக உள்ளவர்களை என்கவுண்டர் என்னும் பெயரில் கொன்று குவிக்கின்றனர்.   இது முழுக்க முழுக்க அரசியல் எதிரிகளை அழிக்கும் செயலாகும்”  எனக் கூறி உள்ளார்.