இளம்தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரகாண்ட் நீதிமன்றம் உத்தரவு…

தெஹ்ராடூன்: இந்து ஆணுடன் திருமணம் செய்வதற்காக இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறி, திருமணம் செய்துகொண்ட இளம்தம்பதிக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

லவ்ஜிகாத் என்ற பெயரில் இந்து பெண்களை காதலித்து, இஸ்லாம் மதத்துக்கு மாற்றுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, உ.பி. உள்பட பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்றம் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில், இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் இந்து பையனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி தம்பதிகள் தரப்பில் உத்தரகாண்ட் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில்,  பெண்ணின் சகோதரர்கள் தங்களுக்கு உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டதுரு.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற  நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் ரவீந்திர மைதானி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணை நடத்தியது.  அதைத்தொடர்ந்து,  உத்தரகண்ட் மத சுதந்திரச் சட்டம், 2018ன்படி, திருமணம் அல்லது பெண்ணை முஸ்லீமில் இருந்து இந்துக்கு மாற்றுவது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தெளிவுபடுத்தியதுடன்,  இந்த சட்டம் பலவந்தமான மத மாற்றங்களுக்கு எதிரானதாகும், மேலும் மாற்றத்தின் ஒரே நோக்கத்திற்காக செய்யப்படும் திருமணங்கள் பூஜ்யமாகவும், வெற்றிடமாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  கணவன் மற்றும் மனைவியுடனான ஒரு உரையாடலில் கிடைத்த தகவலின்படி,   அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து தம்பதிகளுக்கு  அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று இருவரும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியதுடன்,  ஏற்கனவே இதுதொடர்பாக,  ஹரித்வாரில் உள்ள மாவட்ட நீதிபதிக்கு அந்த இளம்பெண் அனுப்பிய விண்ணப்பம் ஏன் செயல்படுத்தப்படவில்லை என்பது குறித்து  விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும், மதம் மாறி திருமணம் செய்துகொண்ட இளம்தம்பதிக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளிக்க உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இது செயல்படுத்தப்பட்டிருந்தால், அது எப்போது செயல்படுத்தப்பட்டது என்பது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 2021 மார்ச் மாதத்துக்கு ஒத்தி வைத்தது.