மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பஞ்சவதி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி பாய்ராகி (வயது 43). இவர் விஷம் அருந்திய நிலையில் அட்கான் பகுதியில் உள்ள டாக்டர் வசந்த்தராவ் பவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி சேர்க்கப்பட்டார். எனினும் கடந்த 22ம் தேதி அவர் இறந்துவிட்டார்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக தான் அந்த பெண் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள வென்டிலேட்டர் கருவியில் கரப்பான் பூச்சி உயிருடன் இருந்ததை பார்த்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

‘மராத்தா வித்யா பிரசாரக் சமாஜ்’ சார்பில் நடத்தப்படும் இந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எ டுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர். இது குறித்து இறந்த பெண்ணின் மகன் திராஜ் பாய்ராகி கூறுகையில், ‘‘கடந்த 22ம் தேதி எனது தாய் இறந்தார். அப்போது வென்டிலேட்டர் கருவியின் டியூப் மீது கரப்பான் பூச்சி உயிருடன் இருந்தது. இதற்கு மருத்துவமனையின் கவனக்குறைவு தான் காரணம்’’ என்றார்.

மருத்தவமனை கண்காணிப்பாளர் அஜித் படேல் கூறுகையில், ‘‘22ம் தேதி இரவு 9.30மணிக்கு அந்த பெண் இறந்தவுடன் தான் வென்டிலேட்டர் நிறுத்தப்பட்டது. இது அனைத்து மரணமடையும் நோயாளிகளுக்கும் கடைபிடிக்கப்படும் நடைமுறை. கருவி நிறுத்தப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் கரப்பான் பூச்சியை பார்த்தாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

வென்டிலேட்டர் உள்ளே கரப்பான் பூச்சி உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. அந்த பெண்ணுக்கு வென்டிலேட்டரில் இணைக்கும் போது புதிய ஃபில்டர் டியூப் மூலம் தான் இணைப்பு கொடுக்கப்பட்டது. ’’ என்றார்.

இதையடுத்து நாசிக் அரசு மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வை
க்கப்பட்டது.