கொரோனா அச்சத்தால் காட்டுக்குள் துரத்தப்பட்ட பெண்.

கொரோனா அச்சத்தால் காட்டுக்குள் துரத்தப்பட்ட பெண்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண், சமீபத்தில் தன் மகளைக் காணச் சென்னை சென்றுள்ளார்.  அங்கிருந்து இரண்டு நாட்களுக்கு முன், தனது சொந்த ஊரான தேனிக்கு வந்தவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

சென்னையிலிருந்து வந்துள்ளார் என்ற தகவல் தெரியவே, அவர் குடியிருக்கும் கம்பவுண்டு வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.  “ஒழுங்கா ஆஸ்பத்திரிக்குப் போயிரு.  ஒன்னால எங்களுக்கும் கொரோனா வந்திரும்” எனக்கூறி விரட்டி அடித்துள்ளனர்.

இதனால் என்ன செய்வதென்று புரியாத அந்தப்பெண், நேராகத் தேனி கண்டமணூர் விலக்கு அரசு மருத்துவமனைக்குச் சென்று தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார். அங்கே பரிசோதனை முடிவுகள் வர ஒரு நாள் ஆகும் எனக் கூறியதால், வீட்டுக்கும் செல்ல முடியாத சூழலில், வேறு வழியின்றி அல்லிநகரம் அருகே உள்ள வீரப்ப அய்யனார் கோயில் மலைக்குச் சென்று விட்டார்.

இரவு முழுவதும் சாப்பாடு, தண்ணீர் ஏதுமில்லாமல் இருட்டில் தவித்த இவருக்கு மறுநாள் மருத்துவமனை பரிசோதனையில் கொரோனா உறுதியானது.

எனவே இவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்ல சுகாதாரத் துறையினர் அவரது வீட்டுக்குச் சென்ற போது தான் அவர் அங்கிருந்து விரட்டப்பட்டது தெரிய வந்துள்ளது.  பின்னர் விசாரித்து அப்பெண்ணைக் காட்டுப்பகுதியிலிருந்து தேடிப்பிடித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அழைத்து வந்துள்ளனர் ஊழியர்கள்.

இது பற்றி வருத்தம் தெரிவித்த சுகாதாரத்துறையினர், “பொதுவாக, சென்னையிலிருந்து வருபவர்களை, அவர்களது வீட்டில் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அப்படி அவர் தனிமையில் இருக்க விரும்பிய நிலையில், அவரை துரத்தியடித்தது ஏற்றுக்கொள்ள முடியாது. இதைப் பார்த்து மற்றவர்களும் இதே போலச் செய்வார்கள். எனவே இதைப் போன்ற விஷயங்களில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்றனர்.

– லெட்சுமி பிரியா