பெண்குழந்தை பெற்ற மருமகளுக்கு கார் பரிசளித்த அதிசய மாமியார்

உத்திரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் நகரைச் சேர்ந்த பிரேமாதேவி, பெண்குழந்தை பெற்றெடுத்த தனது மருமகளுக்கு புதிய ஹோண்டா-சிட்டி காரை பரிசளித்து அசத்தியுள்ளார்.

honda_city

பிரேமாதேவி ஒரு ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அதிகாரியாவார், இவரது மகனும் அரசு பணியில் இருப்பவர். மருமகள் குஷ்பூவுக்கு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து பிரேமாதேவி மிகுந்த மகிழ்ச்சியாக இருந்துள்ளார். குழந்தையை குடும்பத்தில் வரவேற்க வைக்கப்பட்ட விருந்தில் தனது மருமகளுக்கு வரும் தீபாவளியன்று ஒரு புது ஹோண்டா-சிட்டி காரை பரிசளிக்கப்போவதாக பிரேமாதேவி அனைவர் முன்னிலையிலும் வாக்களித்திருக்கிறார்.

அதேபோல தீபாவளியன்று புதுக்காரின் சாவியை மருமகள் கையில் கொடுக்கவே, குஷ்பூவின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்!

இதுகுறித்து பிரேமா தேவி கூறியபோது, “மருமகள்களை மகள்களாக கருதினால் பெண் சிசுக்கொலைகள் நாட்டில் நிகழாது, குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். தான் இந்தக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லிய குஷ்பூ மருமகள்களும் தங்கள் மாமியார்களை பெற்ற தாயைப் போல கருத வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Woman gifts daughter-in-law Honda City after she gives birth to girl child
-=-