இரு கருப்பை கொண்ட பெண்ணுக்கு இரட்டை கர்ப்பம்

இரு கருப்பை கொண்ட பெண்ணுக்கு இரட்டை கர்ப்பம்

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2 கருப்பைகள் இருப்பதும், அவரின் இரட்டை குழந்தைகள் தனித்தனி கருப்பையில் வளர்வதும் கண்டுபிடிக்கப்பட்ட விசயம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் பிரைண்ட்ரீ பகுதியைச் சேர்ந்த 28 வயதான கெல்லி ஃபேர்ஹர்ட்ஸ் என்ற கர்ப்பிணிப் பெண், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது பெரும் வியப்பு காத்திருந்தது. அந்தப் பெண்ணுக்கு 2 கருப்பைகள் இருப்பதும் அதில் இரட்டைக் குழந்தைகள் தனித்தனியாக வளர்ந்து வருவதும் கண்டறியப்பட்டது. ஒவ்வொரு கருப்பையிலும் ஒரு குழந்தை வளர்வதுதான் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. இதனை அறிந்த கெல்லி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இது மிகவும் அரிதான விஷயம் என்றும், 5 கோடி மக்களில் ஒருவருக்கு மட்டும்தான் இதுபோன்று நடக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  தனித்தனி கருப்பையில் வளரும் இந்த குழந்தைகள் Identical Twins எனவும் கூறியுள்ளனர்.  இவர்களின் முகத்தோற்றம், குணாதியசங்கள் உள்ளிட்டவை ஒரே மாதிரியாக இருக்கும். இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள கெல்லி ஃபேர்ஹர்ட்ஸ், தனக்கு 2-வது குழந்தை பிறக்கும் போது மற்றொரு கருப்பை இருப்பது தெரியவந்ததாகவும், ஆனால் அது முழுமையாக வளர்ச்சியடையவில்லை என்றும் மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த முறை ஸ்கேன் செய்யும் போது அந்த கருப்பை முழுமையாக வளர்ச்சியடைந்து அதில் குழந்தைகள் இருப்பது அவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், டெலிவரியின் போது அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– லெட்சுமி பிரியா

 

புகைப்பட உதவி : நியூஸ் 7