கர்ப்பிணியைக் கைவிட்ட ஆம்புலன்ஸ்.  சுகப்பிரசவம் தந்த தீயணைப்பு வாகனம் 

கர்ப்பிணியைக் கைவிட்ட ஆம்புலன்ஸ்.  சுகப்பிரசவம் தந்த தீயணைப்பு வாகனம்

புயலுக்குப் போட்டியாக வந்த  தீ அணைப்பு வாகனத்தில் சுகப்பிரசவம்..

மே.வங்காள மாநிலத்தைக் குறிவைத்த ஆம்பன் புயல், ஒடிசாவையும் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இதனால் ஒடிசாவில் புயல் தாக்கும் அபாயம் இருந்த 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்து 800 கர்ப்பிணிப் பெண்கள் வேறு இடத்துக்குப் பத்திரமாக மாற்றப்பட்டிருந்தனர்.

எனினும் கேந்திரபாடா மாவட்டம் ஜான்கரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜானகி என்ற நிறைமாத கர்ப்பிணி, நேற்று தனது வீட்டில் மாட்டிக்கொண்டார்.

புயல் கரை கடக்கும் சமயத்தில் ஜானகிக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பலமுறை போன் செய்தும் அவசர ஆம்புலன்ஸ் வரவில்லை.

கடைசியாக  மகாகலபாடா தீ அணைப்பு நிலையத்துக்கு போன் செய்துள்ளார், ஜானகியின் கணவர்.

விஷயத்தைச் சொல்லியுள்ளார்.

அங்கிருந்து ,ஜானகி வீட்டுக்குப் புயல் வேகத்தில் தீ அணைப்பு வாகனம் விரைந்தது. ஆனால் வீட்டை நெருங்க முடியவில்லை.

வீட்டுக்குச் செல்லும் பாதையில், 20க்கும் மேற்பட்ட மரங்களைச் சாலையில் சாய்த்து விட்டுச் சென்றிருந்தது, ஆம்பன் புயல்.

அதை எல்லாம் வெட்டி வீழ்த்தி ஜானகி வீட்டுக்குச் சென்ற தீ அணைப்பு வீரர்கள், அவரை தங்கள் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் போகும் வழியிலேயே ஜானகி, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

 பின்னர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்