புதுடெல்லி: மிடாலி சந்தோலா என்ற பெண் பத்திரிகையாளர், டெல்லியில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது சுடப்பட்டார். இந்த சம்பவத்தில் அவர் கையில் காயத்துடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; கிழக்கு டெல்லியின் வசுந்தரா என்கிளேவ் பகுதியில், தனது காரில், அதிகாலை 12.30 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரின் காரை முந்திச் சென்ற மாருதி ஸ்விஃப்ட் காரில் இருந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள், இவரை நோக்கி இருமுறை சுட்டனர்.

மேலும், சுட்டதோடு அல்லாமல், காரை நோக்கி முட்டைகளையும் வீசினர். இரண்டு குண்டுகளில் ஒன்று அவரின் கையில் பட்டது. இந்த சம்பவத்தை நிகழ்த்திவிட்டு, மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து கிழக்கு டெல்லியின் தர்மஷீலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மிடாலி. அவர், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த நபர்கள், இரவில் செல்லும் கார்களை குறிவைத்து கொள்ளையடிப்பவர்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர் காவல் துறையினர்.

அதேசமயம், அவருக்கு யாரேனும் தனிப்பட்ட பகையாளிகள் இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள். தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆகாது என்று விசாரணையில் தெரிவித்துள்ளார் மிடாலி. எனவே, அதுதொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர்.