ஜெய்ப்பூர்

பிரதமர் மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை விமரிசிக்கும் எழுத்தாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் வருவது அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் இரு பெண் பத்திரிகையாளர்கள் பத்திரிகைகளில் பிரதமரையும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தையும் விமர்சித்து எழுதி உள்ளனர்.  அதில் தீக்ஷா சர்மா என்பவருக்கு முதலில் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டது,  ஒரு நோட்டுப் புத்தகப் பேப்பரில் எழுதியதை புகைப்படமாக அனுப்பப்பட்டிருந்தது.

 

ஜெய்ப்பூரை சேர்ந்த மற்றொரு பெண் பத்திரிகையாளர் ரோசம்மா தாமஸ், பயிர் காப்பீடு பற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.  அவருக்கும் அந்த செய்தி வந்த மூன்றாம் நாள் இதே போல ஒரு மிரட்டல் வாட்ஸ்அப் மூலமாக வந்துள்ளது.  அவருடைய அந்த செய்தி அதற்குப் பின் டைம்ஸ் ஆஃஃப் இந்தியா வலைத்தளித்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.  அந்த செய்தியில் “விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்த பயிர் காப்பீடு தற்போது மோசடியாக மாறி உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

தீக்‌ஷா சர்மாவுக்கு 8459242619 ஆகிய எண்ணில் இருந்தும் ,8647082714 என்ற எண்ணில் இருந்தும் ஒரே செய்தி இருமுறை வந்துள்ளது.  அவர் அந்த எண்ணை ட்ரூ காலர் மூலம் செக் செய்தபோது அந்த எண்ணுக்குறியவர் பெயர் தெரியவில்லை எனினும் அது மேற்கு வங்கத்தில் உள்ளதாக தகவல் வந்துள்ளது.

ரோசம்மா தாமஸ்க்கும் இதே போல செய்தி வந்துள்ளது.  அதை சக பத்திரிகையாளர்களிடம் அவர் காட்டிய போது அதே செய்தி தீக்‌ஷாவுக்கு வந்துள்ளது அவருக்கு தெரிய வந்துள்ளது.  இருவரும் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளனர்.  அதே நேரத்தில் முகநூலில் ரோசம்மாவின் செய்தியை பகிர்ந்ததற்காக டில்லியை சேர்ந்த சுபம் துர்கா என்னும் பெண்ணிற்கும் இதே போல செய்தி வந்துள்ளது.  ஆனால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு நம்பரில் இருந்து செய்திகள் அனுப்பப் பட்டுள்ளன.

சமீபத்தில் கவுரி லங்கேஷ் என்னும் பத்திரிகையாளர் அவர் வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிந்ததே.  தற்போது மேலும் இரு பெண் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.