டில்லி

மக்களவை உறுப்பினரான அசாம் கான் பெண் உறுப்பினரிடம் தகாத முறையில் பேசியததற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினர்களில் அசாம் கானும் ஒருவர் ஆவார்.  இவர்  நடிகை ஜெயப்ரதாவை தேர்தலில் தோற்கடித்தார்.    அப்போது இவர் ஜெயப்ரதா காக்கி உள்ளாடை அணிந்துள்ளதாகக் கூறியது பெண்களிடையே கடும் சர்ச்சையைக் கிளப்பியது.   ஜெயப்ரதா அவரை தமது சகோதரர் போல் எண்ணியதாகவும் ஆனால் அவர் அவ்வாறு எண்ணவில்லை எனவும் தெரிவித்தார்.

மக்களவையில் முத்தலாக் தடுப்பு சட்ட மசோதாவின் மீதான விவாதத்தில்  அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் வாதத்தைத் திசை திருப்பும்படி இங்கும் அங்குமாக பேச வேண்டாம் என அசாம் கான் கூறினார்.  அப்போது சபாநாயகர் இல்லாததால் பாஜக பெண் உறுப்பினர் ரமாதேவி அவையை நடத்தி வந்தார். அவர் அசாம் கானிடம் நீங்கள் அங்கும் இங்கும் பார்க்காமல் விவாதம் செய்யுங்கள் என கூறினார்.

அதற்கு ரமாதேவியிடம் அருவறுக்கும் வார்த்தைகளை அசாம் கான் கூறியதாக சொல்லப்படுகிறது.   அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க ரமாதேவி உத்தரவிட்டார்.   அசாம் கானின் இந்த வார்த்தைகளுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் கூறினார்கள்.   அதற்கு தாம் ரமாதேவியை தங்கை போல் நினைப்பதாகவும் தவறாக ஏதும் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

அசாம் கானுக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேச முற்பட்டார்.  அப்போது சபாநாயகர் வந்து அவையின் தலைமையை ஏற்றுக் கொண்டார்.  அகிலேஷ் யாதவ் தாம் முதல்வர் பதவி வகித்தவர் எனவும் அசாம் கான் பேச்சில் எவ்வித தவறும் இல்லை என வாதிட்டார்.   அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் அகிலேஷ் யாதவும் மன்னிப்பு கோர வேண்டும் என கூறினார்.

இதையொட்டி கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்தது.  அசாம் கான் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

அசாம் கானின் பேச்சுக்கு திருணாமுல் காங்கிரஸ் பெண் உறுப்பினர் சங்கீதா ராய், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இராணி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   அத்துடன் தேசிய பெண்கள் ஆணையம் மற்றும் டில்லி பெண்கள் ஆணையம் அசாம் கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.